#வாடிய_பயிரைக்_கண்டபோதெல்லாம்_வாடினேன்'' எனும் முழக்கத் தொடரை அனைத்துத் தமிழுர்களும் கேட்டிருப்பர். அதுவும், தமிழகத்திற்கு விவசாய காலங்களில் காவிரி நீர் வராத பொழுதும்; மழை பொய்த்த சூழலிலும் பெரும்பாலான மேடைகளிலும் - ஊடகங்களிலும் இம்முழக்கம் ஓங்கி ஒலிக்கப்படுகின்றது.
''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்….!'' என்று தொடங்கும் திருஅருட்பாவின் முழுப்பாடலையும், அதன் வழி வள்ளல் பெருமானாரின் சிந்தனை வீச்சையும் காண இக் கட்டுரை முயல்கின்றது.
*''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்…!’'* எனத் தொடங்கும் அருட்பாவின் அடுத்த வரி; *“பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்...!''* என்பதாகும்.
பசிக் கொடுமையினால் வீடுதோறும் பிச்சை கேட்டும், உணவு கிடைக்காமல் உடல் இளைத்து மெலிந்த ஏழை எளியோரைக் கண்டு தம் உள்ளம் நடுநடுங்கியதாக வள்ளல் பெருமானார் இப்பாடலில் குறிப்பிடுகின்றார்.
பசிக்கொடுமையினால் அயர்ந்து சோர்ந்த தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென , அத்தூய துறவுள்ளம் துடிதுடித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியான அன்றைய தமிழகத்தில் ஆங்கிலேய - அன்னியரின் சுரண்டலாலும் , உணவு பஞ்சத்தாலும் பட்டினி சாவு அதிகரித்திருந்தன. எந்த வகையாலும் ஆதாரம் (ஆகாரம்) இல்லாத ஏழை எளியோர்களுக்குத் தினசரி பேதமின்றி உணவு வழங்க வள்ளல் பெருமானாரின் கருணை உள்ளம் திட்டம் தீட்டியது. அதன் விளைவு ; ஆதரவற்ற ஏழை எளியோர்களுக்குத் தினசரி மதிய - இரவு உணவுகளை வழங்கும் நோக்கத்தோடு சத்திய தருமச்சாலை எனும் அமைப்பை வடலூரில் வள்ளல் பெருமனார் தொடங்கினார்கள்.
*பிரபவ வருடம் (1867) வைகாசி 11-ஆம் நாள் வியாழக்கிழமை சத்திய தருமச்சாலையின் தொடக்கவிழா நடைப்பெற்றது.* அன்றயதினம் வள்ளல் பெருமானாரின் தவக்கரத்தால் மூட்டிய அடுப்புத் தீ இன்று வரை அணையாமல் ஏழை எளியோரின் பசித்தீயை அணைத்து வருகின்றது.
சத்திய தருமச்சாலையின் தொடக்க விழாவே புதுமையாய் அமைந்திருந்தது. சத்திய தருமச்சாலையின் செங்கல் கட்டடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணி ஒருபுறம் நடைப்பெற்றது; அதேவேளையில் மறுபுறம் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடத்தில் தருமச்சாலை தொடங்கி ஏழையெளியோர்களின் பசிப்பிணியை நீக்கிக்கொண்டிருந்தது.
ஆம்... , பொதுமக்களின் நலன் காக்கும் தர்மப் பணியின் மனை முகூர்த்தமும் , தர்மக் காரியத்தின் தொடக்க விழாவும் ஒருங்கே ஒரே நாளில் ஒரே பொழுதில் நடந்தேறியது.
'நன்றே செய்க; இன்றே செய்க' - என்ற தமிழ் மரபில் வந்த வள்ளல் பெருமானாரின் செயல் வீரத்தைப் பாராட்டுவதா ? அல்லது ஏழை எளியோரின் பசிப்பிணியை உடனடியாக நீக்க துடித்த கருணையுள்ளத்தைக் கண்டு வியப்பதா? .
*'பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்*' - என்று வள்ளல் பெருமானார் எழுதியதுடன் மட்டும் நின்றுவிடாமல் , ஏழை எளியவர்களின் பசிப்பணியை நீக்க வழிவகையையும் செய்தார்கள்.
தருமச்சாலையின் தொடக்க விழா நடைபெற்ற பொழுதே, அவ்விடத்தின் அருகே கிணறு , குளம் முதலிய நீர் நிலைகளும் தோண்டப்பட்டன. சத்திய தருமச்சாலையின் முதல் நாள் அன்னதானத்திற்கு , மாட்டு வண்டிகள் மூன்றில் அரிசி மூட்டைகளும் , ஒரு வண்டியில் காய்கனிகளும் வந்திறங்கியதைக் கூ. துரைசாமி ஐயா எழுதிய கடிதத்தால் அறிய முடிகின்றது. தருமச்சாலையின் தொடக்க விழா நாளில் மட்டும் சுமார் மூவாயிரம் பேர் சாப்பிட்டதாக மு.அப்பாசாமி ஐயா எழுதிய கடிதத்தால் அறியமுடிகின்றது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இன்றைய சூழலில் கூட, ஆங்காங்காகே தேனீர் கடைகளில் தனிக் குவளை கலச்சாரம் தலைவிரித்தாடுகின்றது . ஆனால் , இன்றளவிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துச் சாதியினரையும் ஒன்றாக அமர வைத்துச் சமபந்தி சாப்பாடு போட்டு, சமூக நீதிக்கு வள்ளல் பெருமானார் வித்திட்டார்கள்.
தருமச்சாலையின் தொடக்க விழாவில் பெருமானார் எழுதிய 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' எனும் உரைநடை நூலின் சில பகுதிகள் வாசித்து விளக்கி உரைக்கப்பட்டன.
*''ஜீவகாருணியத்தின் முக்கிய லட்சியமாவது எது எனில்; எந்த வகையாலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்கு உண்டாகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லட்சியம் என்று அறிய வேண்டும்...''*
*' பசி என்கின்ற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாராத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம்...'*
என்பன போன்ற பகுதிகள் தருமச்சாலையின் தொடக்க விழாவில் விவரிக்கப்பட்டன..
தருமச்சாலையின் நோக்கம் குறித்து ஓர் அறிக்கையும் பெருமானார் அன்றையதினம் வெளியிட்டார்கள். அதன் நிறைவில் , *''ஜீவ தயையுடைய புண்ணியர்கள் தாங்கள் தங்களால் கூடியவரையில் பொருள் முதலிய உதவி செய்து , அதனால் வரும் லாபத்தை பாகஞ் செய்து கொள்ள வேண்டும்..!''* என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வடலூரில் தருமச்சாலையை ஒட்டி நிலம் வைத்திருந்த சுமார் நாற்பது பேர் ஒன்றுகூடி, எண்பது காணி நிலத்தை இனமாக எழுதி பத்திரம் செய்து கொடுத்தனர்.
1867- வைகாசி 11- இல் தொடங்கிய சத்திய தருமச்சாலை இன்றுவரை தொய்வின்றி , தடைபடாது - இடைவிடாது ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றது.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட; *”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்...” என்ற பாடலின், இரண்டாம் வரியின் செயல் வடிவமே தருமச்சாலையாய் மலர்ந்த்து. 'பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்' என்று கவிஞராய்ப் படைப்பிலக்கியவாதியாய் எழுதியதோடு மட்டும் அல்லாமல், ஏழைகளின் பசிப் பிணியை நீக்க தீர்வையும் கண்டார்கள்.*
*''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்...!''* எனத் தொடங்கும் பாடலின் மூன்றாம் அடி…. என்னவென்று தெரியுமா?
*' நீடிய பிணியால் வருந்துகின்றோர்; என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்...!''*- என்பதே அப்பாடலின் மூன்றாம் அடி ஆகும்.
அன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்களில் பெரும்பாலானோர் நோய்களால் , பிணிகளால் துன்பப்பட்டு வருத்தப்படுவதைக் கண்டு வள்ளல் பெருமானாரின் கருணை உள்ளம் துடிதுடித்ததாம். அதன் விளைவாகச் சத்தியத் தருமச்சாலையின் கிளைச்சாலையாக வைத்தியச் சாலையைப் பெருமானார் தொடங்கினார்கள்.
வாழையடி வாழையாகத் தமிழ்ச் சித்தர்களின் வழியில் வந்த வள்ளல் பெருமானார், தருமச்சாலையின் கிளைச் சாலையான வைத்தியச் சாலையில் சித்த மருத்துவத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். தருமச்சாலையானது பசிப்பணியை நீக்கியதோடு; உடல் நோயை நீக்கும் சித்த மருத்துவமனையாகவும் திகழ்தது.
வள்ளல் பெருமானார் எழுதியுள்ள 485 மூலிகைகள் பற்றிய மூலிகை குண அட்டவணையும், சஞ்சீவி மூலிகைகள் பற்றிய குறிப்பும், மருத்துவக் குறிப்புகளும் பெருமானாருக்கு இருந்த சித்த மருத்துவ ஞானத்தைப் பறைசாற்றும்.
*''நீடிய பிணியால் வருந்துகின்றோர்; என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்...!'' - என்று பெருமானார் எழுதியதுடன் மட்டும் நின்றுவிடாமல்,பொது மக்களின் நோயை நீக்க மருத்துவமனையையும் அமைத்துத் தீர்வு கண்டார்கள்.*
''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' எனும் அருட்பாவின் *நான்காம் அடி* பற்றி இனி சிந்திப்போமே...!
*''ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்!''* என்பதே அப் பாடலின் நிறைவான அடி ஆகும்.
தமிழக மக்கள் ஏழைகளாய் வாழ்வதைக் கண்டு வள்ளல் பெருமானாரிரின் மனம் வருந்தியதை, இவ் வரிகளால் நாம் புரிந்துகொள்ளமுடிகின்றது. தமிழர்களின் வறுமைக்குக் காரணம் என்னவென்று அத்தூய உள்ளம் ஆராயத்தொடங்கியது. மக்களின் வறுமை ஒழிய வழிவகை செய்தாக வேண்டுமென, அவ் அருள் உள்ளம் திட்டம் தீட்டத் தொடங்கியது. மக்களின் பசிப்பிணிக்கும், வறுமைக்கும், நோய்க்கும் மக்களின் அறியாமையே அடிப்படைக் காரணம் என பெருமானார் எண்ணினார்கள். மக்களின் அறியாமையைக் கல்வியால்தான் நீக்க முடியும் என முடிவுசெய்தார்கள்.
அதன் விளைவாகச் சத்தியத் தருமச்சாலையானது பொதுமக்களின் வயிற்றுப் பசியை நீக்கியதோடு மக்களின் அறியாமையை நீக்கி அறிவுப் பசிக்கும் தீர்வு கண்டது. தருமச்சாலையின் அடுத்த கிளைச் சாலையாகச் சன்மார்க்கப் போதினி (1867) எனும் சாஸ்திரசாலை உருவானது.
சன்மார்க்கப் போதினியில் சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து வயதினர்க்கும் பொதுக்கல்வி கற்பிக்கப்பட்டது. இப் பாடச்சாலையில் தமிழ், ஆரியம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளும் கற்பிக்கப்பட்டன. இங்கு தினசரி காலை மாலை இரு வேளையும் ஐந்தைந்து நாழிகை நேரம் திருக்குறள் சொல்லிக் கொடுக்கப்பட்டது.
இப் பாடச் சாலையையொட்டி பின் (1872) சமரச வேத பாடசாலை என்றொரு சன்மார்க்க உயர் பாடசாலையும் உருவானது. இதில் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் சன்மார்க்க உயர்கல்வி கற்பிக்கப்பட்டது. இதில் படிப்பவர்களின் பயிற்சிக்கும் அவரவர்களின் குடும்பத்திற்குத் தக்கப்படி மாதந்தோறும் பொருளுதவியாகக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது..
மேலும், தருமச்சாலையிலிருந்து *சன்மார்க்க விவேக விருத்தி”* எனும் இதழும் வெளிவந்தது. வள்ளல் பெருமானார் தலைமையில் பரங்கிப்பேட்டை காதர் சகாயு உள்ளிட்ட 49 அன்பர்கள், இப் பத்திரிக்கை மாதந்தோறும் வெளிவருவதற்காகப் பொருளுதவி செய்தனர்.
சத்தியத் தருமச்சாலையானது பொது மக்களின் பசிப்பிணியை நீக்கியதுடன், அறிவுப் பசியையும் நீக்கியது.
இவ்வாறாகச் சத்தியத் தருமச்சாலையைச் சார்ந்து வைத்தியச் சாலை, சாஸ்திர சாலை, உபகார சாலை, விருத்தி சாலை, உபாசனா சாலை, யோக சாலை, விவகார சாலை என ஏழு கிளைச் சாலைகளும் செயல்பட்டன.
தருமச்சாலை பொதுமக்களுக்கு தினசரி உணவு வழங்கியதுடன் நோயாளிகளுக்கு மருத்துவத்தையும் வழங்கியது. அது மட்டுமின்றி *தருமச்சாலையில் தினசரி திருக்குறள் சொல்லிக்கொடுக்கப்பட்டு தனிமனித ஒழுக்கத்தை வளர்த்தது.*
மேலும், சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் மும்மொழியில் பாடம் கற்பிக்கப்பட்டது. தருமச்சாலையானது வள்ளல் பெருமானார் காலத்தில் சோறு வழங்குவதோடு மட்டுமில்லாமல் அறிவுசால் பல்கலைக் கழகம் போலவும் விளங்கியது.!.
ஓரறிவுடைய பயிர் வாடுவதைக் கண்டு வாடிய வள்ளல் பெருமானாரின் கருணையுள்ளமானது, அன்றையத் தமிழர்களின் அவல நிலையைக் கண்டும் வாடியது. அவ்வாறு வாடியதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவ் அவலத்தை நீக்கவும் திட்டம் தீட்டி செயல் வடிவம் கொடுத்தது.
வள்ளல் பெருமானார் அன்றைய மக்களின் இடையூற்றையெல்லாம் நீக்க முயற்சி செய்தார்கள். நாமும் வள்ளல் பெருமானார் வழியில், நம்மைச் சுற்றி வாழும் சக மனிதரின் துன்பத்தையும், எல்லா உயிரினத்தின் துன்பத்தையும் நீக்கி பேரின்ப பெரு வாழ்வில் வாழ்வோம்.
No comments:
Post a Comment